கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பு, கடந்த மாதம் சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நோய்ப் பரவலை எதிர்கொள்வது குறித்து காணொலியில் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, சார்க் நாடுகளில் கரோனாவை எதிர்கொள்ள இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும், உதவிக்கு இந்திய மருத்துவர்கள் சார்க் நாடுகளுக்கு அனுப்பப்படுவர், சார்க் சுகாதாரத் துறையினருக்குப் பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை முன்மொழிந்தார்.
அந்தவகையில், கரோனாவை எதிர்கொள்ளுதல் குறித்து திறன் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றின் மூலம் சார்க் நாடுகளின் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு, இந்தியா இலவசமாகப் பயிற்சி அளிக்கத் தொடங்கியதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தொழில்நுட்பம், பொருளாதாரத் திட்ட இணையதளம் வாயிலாகக் காணொலிகளில் இந்தப் பயிற்சியானது அளிக்கப்பட்டுவருவதாக வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
சுமார் 45 லிருந்து 60 நிமிடங்கள் வரை நீளம் கொண்டு இந்தக் காணொலிகளில்..
கரோனா பரவலைத் தடுப்பது, கண்டறிவது,
கரோனா நோயாளிகள்; அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கையாளுவது,
பொதுமக்களைக் கண்காணிப்பது
உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்னைகள் குறித்து விளக்கவுரைகள் அடங்கியிருக்கிறதாம்.
இந்தப் பயிற்சிக்கு சார்க் நாட்டு வல்லுநர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக வெளியுறவுத் துறை மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவருக்குச் சம்மன் ?