தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுக்கும் விதமாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின் கடுமையான பிரிவுகளாகப் பார்க்கப்படும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரணையின்றி கைது செய்தலுக்கு தடை விதித்தும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன்பிணை வழங்கும் திருத்தத்தை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பால் சட்டம் நீர்த்து போய்விடும் என்று கூறி பல்வேறு அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போராட்டத்தில் இறங்கியது. பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறுசீராய்வு செய்ய மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடும் நடவடிக்கைகளை கொண்ட பழைய சட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் மீண்டும் சேர்த்தது.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, “ஒடுக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், உண்மை நிலவரங்கள் ஆகியவை உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பால் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. நாடும், சமூக விழிப்புணர்வும்தான் முக்கியம். ஒடுக்கப்பட்டவர்கள் மீது காங்கிரஸ், பாஜக எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது” என்றார்.