காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. தொலைத்தொடர்பு வசதிகள், இணையம் ஆகியவை முடக்கப்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு செல்ல அனுமதி கோரியிருந்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகே அரசியல் கட்சித் தலைவர்கள் காஷ்மீருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள சம்பவம் பல்வேறு தரப்பினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூர், "அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு காஷ்மீருக்குச் சென்று பார்வையிட நான் அனுமதி கோரியிருந்தேன். ஆனால், அது ஏற்கப்படவில்லை. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசின் விருந்தினர்களாக அங்குச் செல்கின்றனர். இது இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல்" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் இச்செயலை விமர்சித்துள்ள உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட நம் நாட்டின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டை காண அலங்காநல்லூருக்கு வருகைதருகிறார் ரஷ்ய அதிபர் புடின்?