நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச வருமான உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதியளித்தது.
இதன் மூலம் இந்தியாவிலுள்ள 20 விழுக்காடு ஏழை மக்கள் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.6000 என்ற வகையில் ஆண்டிற்கு ரூ.72,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ள பாஜக கட்சி, முன்னாள் காங்கிரஸ் பிரதமர் இந்திரா காந்தி 'வறுமையை ஒழிப்போம்' என்று முன்பே கூறியிருக்கிறார். பிறகு ஏன் காங்கிரஸ் கட்சி 70 வருடங்களாக வறுமையை ஒழிக்காமல் செயல்பட்டுவருகிறது என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இத்திட்டம் ஒருவரை ஏமாற்றுவதற்கான முயற்சி எனக் கூறியுள்ளது.
இதனிடையே காங்கிரசின் இத்திட்டம் குறித்த அறிவிப்புக்கு ஆர்வம்காட்டாத மாயாவதி பாஜக கூறியது சரிதான் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,"ஆளும் பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருமான உறுதித் திட்டம் ஒருவரை ஏமாற்றுவதற்கான முயற்சி எனக்கூறியது உண்மைதான். ஆனால், தேர்தல் சமயத்தில் இதேபோல்தான் பாஜக பரப்புரையை நிகழ்த்துகிறது.
சொல்லப்போனால் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளுமே தேர்தல் நேரத்தில் ஏழைகள், கூலி வேலை செய்பவர்கள், விவசாயிகள் நலனில் அக்கறை காட்டுவதுபோல் தங்களை காட்டிக்கொள்கின்றனர்" எனக்குற்றம்சாட்டியுள்ளார்.