உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அப்பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதற்கிடையே, பாலியில் வன்கொடுமைக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி தலைவர்களிடம் காவல்துறை தடியடி நடத்தியது. இதனைக் கண்டித்த உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, அரசு ஆணவப்போக்கை மாற்றாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க பகுஜன் சமாஜ் கட்சியின் குழுவே முதலில் சென்றது. காவல் நிலையத்திற்கு அழைத்து அக்குழு அவர்களிடம் பேசியது.
இதனைத் தொடர்ந்தே ஊடகத்திற்குச் சென்றோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் காவல்துறை தடியடி நடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது; வெட்கக்கேடான ஒன்று. இந்த ஆணவப்போக்கை அரசு மாற்றாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகும்" என்றார்.
இதையும் படிங்க: உ.பியில் தொடரும் பாலியல் குற்றங்கள்: சந்தைக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!