மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சித் தலைவர் மாயவாதி தலைமையில் நேற்று நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.
மக்களவை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து உத்தரப் பிரதேசத்தில் போட்டியிட்டது. அனால் உ.பியில் பாஜக அதிக இடங்களைப் பெற்றது. இந்நிலையில், தேர்தல் தேல்விக்கு அகிலேஷ் யாதவ்தான் காரணம் என மாயவாதி குற்றஞ்சாட்டியுள்ளர். கட்சிக் கூட்டத்தில் மாயவாதி பேசுகையில், 'பகுஜன் சமாஜ் கட்சி-சமாஜ்வாடி கட்சி கூட்டணி உ.பி-யில் பாஜகவுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். அனால், 64 இடங்களுக்கு வெறும் 15 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே கூட்டணியில் விரிசல் தோன்றத் தொடங்கியது. தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அகிலேஷிடமிருந்து இதுவரை எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் மிஸ்ரா என்னிடம் பேசுமாறு அகிலேஷிடம் கூறியுள்ளார். இருப்பினும் தற்போதுவரை அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. மாறாக நான் அவரை அழைத்து அவரது குடும்ப உறுப்பினரை இழந்ததற்கு வருத்தத்தை தெரிவித்தேன்' என்று மாயாவதி தெரிவித்தார். மேலும் பேசிய மாயாவதி, 'அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி தலித் மக்களுக்கு எதும் செய்யவில்லை; இதுவே தோல்விக்கு முக்கியக் காரணம். முலாயம்சிங் மறைமுகமாக பா.ஜ.க-வுடன் கை கோர்த்து, இரு கட்சியினரும் சேர்ந்து எனக்கு எதிராக சதிகள் செய்தனர். இனி தேர்தல் களத்தில் தனித்தே நிற்போம்' எனக் கூறினார்.
மின்னணு இயந்திர வாக்குப்பதிவுக்குப் பதிலாக வாக்குச் சீட்டு முறை அமல்படுத்த வேண்டுமெனவும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பின்னர், மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் துணைத்தலைவராகவும், மருமகன் ஆகாஷ் ஆனந்த் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கு, பகுஜன் சமாஜ் கட்சி குடும்ப அரசியல் செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது.