1985ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி ராஜஸ்தான் மாவட்டத்திலுள்ள தீக் சட்டப்பேரவை தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான ராஜா மான் சிங் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.
இந்த தேர்தலில் ராஜா மான் சிங்கிற்கு காங்கிரஸ் சார்பில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும், அவற்றை மீறியதால் ஆத்திரமடைந்த மான்சிங் அம்மாநில முதலமைச்சரின் ஹெலிகாப்டரை தனது காரைக் கொண்டு இடித்து சேதப்படுத்தியதாக காவல்துறை முதல் தகவல் அறிக்கையின் வாயிலாக தெரிகிறது. இதனால், ராஜஸ்தான் மாநில அரசுக்கும், ராஜா மான் சிங் ஆதரவாளர்களான ஜாட் சமூகத்தினருக்கும் இடையேயான மோதல் வெடித்தது.
இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் ராஜா மான் சிங் கட்சியினருக்கும், அம்மாநில காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜா மான் சிங் கொல்லப்பட்டார். இவருடன் சுமர் சிங், ஹரி சிங் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து அவரது கட்சியினர் முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அம்மாநில அரசு துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு யார் அனுமதி அளித்தார்கள் என்ற கோணத்தில் விசாரணைையை நடத்தியது.
பின்னர், ராஜா மான் சிங்கின் மருமகன் விஜய் சிங் இந்தச் சம்பவம் தொடர்பாக தீக் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த வழக்கு 1990களில் மதுராவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து தற்போது, 35 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜா மான் சிங் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 11 காவலர்கள் குற்றவாளிகள் என மதுரா நீதிமன்றம் தீர்ப்பளித்து, அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பிற்கு மான் சிங்கின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.