கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவினை சில தளர்வுகளுடன் அமல்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, ஒரு மாதத்திற்கும் மேலாக செயல்படாமலிருந்த தொழில்சாலைகள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கியுள்ளன. மேலும், ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.
முன்னதாக, பல்வேறு சமூக ஆர்வலர்களும், அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு போதிய முன்னேற்பாடின்றி ஊரடங்கினை அமல்படுத்திவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தற்போது அவர்களின் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் விதமாக இரண்டு துன்பியல் சம்பவங்கள் நாட்டில் நிகழ்ந்துள்ளது.
ஒன்று, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து பத்திற்கும் மேற்பட்டோரும், பல கால்நடைகளும் பலியாகியுள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மற்றொன்று, வாழ்வாதாரம் பாதித்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, அசதியில் உறங்கியபோது சரக்கு ரயில் மோதி 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த இரு வேறு துன்பியல் நிகழ்வுகளுக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர், மாநில செயலாளர் சோ. பாலசுப்பிரமணியன் தலைமையில் பாரதி வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் அக்கட்சி சார்பில் உறுப்பினர்கள் புதுச்சேரியில் அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாகவும், மத்திய அரசு எவ்வித முன்னேற்பாடுகளையும் எடுக்காமல் ஊரடங்கினை அறிவித்ததே இவ்வாறான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைவதாகவும் விமர்சித்தனர்.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு