இந்தியாவில் தற்போது நிலவுகிற பொருளாதார மந்தநிலைக்கு முந்தைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனும் மன்மோகன் சிங்குமே காரணம் என்று தொடர்ச்சியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டிவந்தார். இவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக மன்மோகன் சிங் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "கடந்த நான்கு ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் உற்பத்தித் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நகர்ப்புறத்தில் உள்ள இளைஞர்கள் வேலயில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் சீன இறக்குமதிப் பொருள்கள் பெருகிவிட்டன.
மத்திய அரசின் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளாலும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி ஆட்சிக்காலத்தில் தற்கொலை செய்துகொண்ட பெரும்பாலான விவசாயிகள் மகாராஷ்டிரா விவசாயிகள்தான். எதிர்க்கட்சிகளையும் எதிராளிகளையும் திட்டுவதை விட பொருளதாரச் சிக்கல்களைப் போக்கத் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.
பொருளாதாரச் சிக்கல்களைச் சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் பிரச்னை என்ன என்பதை கண்டறிய வேண்டும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளை பார்க்கையில் பிரச்னை என்ன என்பதே அரசுக்குத் தெரியவில்லை என்பது புரிகிறது. இந்தப் பொருளாதாரச் சிக்கல்களை விரைவில் தீர்க்கவில்லையென்றால் நாட்டு மக்கள் பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்" என்றார்.
இதையும் படிங்க: ஹரியானாவில் சோனியா காந்தி இன்று பரப்புரை!