புதுச்சேரியில் முக்கியச் சுற்றுலாத் தலங்கலான மணக்குள விநாயகர் கோயில், கடற்கரை, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம், உசுட்டேரி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தங்களின் குடும்பத்தினருடன் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல் புதுச்சேரி அருகே உள்ள சர்வதேச நகரமான ஆரோவில் குயிலாப்பாளையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மஞ்சுவிரட்டு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்குள்ள மாரியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற மஞ்சு விரட்டில், ஊர்மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மாடுகள், கன்றுக் குட்டிகளுக்கு கொம்புகளில் வண்ணம் பூசி, பூ, பலூன்களைக் கட்டியும், ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களின் படங்களைக் கொண்டு அலங்கரித்தும் மாடுகளை மாரியம்மன் கோயில் திடலுக்கு அழைத்து வந்தனர்.
அதன்பின்னர் அம்மன் கோயிலின் முன்பு மாடுகளுக்கு சிறப்புப் பூஜைசெய்யப்பட்டு, மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது ஏராளமான சிறுவர்களும் இளைஞர்களும் மாடுகளை உற்சாகத்துடன் விரட்டிச் சென்றனர்.
மஞ்சுவிரட்டை பார்ப்பதற்கு அருகிலுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களும் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழர்களின் பாராம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.