கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்திய ஊரடங்கை, நான்காம் கட்டமாக மே 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதன் காரணமாக, வெளி மாநில தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு நீட்டிப்பின்போது மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதில், ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தது. இருந்தபோதிலும், இந்த சேவைக்கு அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பயணச்சீட்டு பெற வசதியற்ற தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடைபயணமாக செல்ல தொடங்கினர்.
இந்நிலையில், டெல்லியில் பணிபுரிந்துவந்த வெளி மாநில தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேர், சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "டெல்லியில் தங்கியுள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் வகையில், சமந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெற்றுவருகிறோம்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வெளி மாநில தொழிலாளர்கள் எந்த பிரச்னையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதை உறுதிப்படுத்த மூத்த அலுவலர்களுக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தொழிலாளர்கள் சாலைகளிலோ அல்லது ரயில் தண்டவாளத்திலோ நடத்துச் செல்வது கண்டறிப்பட்டால் உடனடியாக அவர்களை தற்காலிக விடுதியில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களை 'ஷ்ராமிக்' சிறப்பு ரயில்களிலோ அல்லது பேருந்துகளிலோ தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்." எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விலையில்லா உணவு : மதுரை அம்மா உணவகங்களில் பயனடைந்த 6.31 லட்சம் பேர்!