பெங்களூருவின் பி.இ.எல். பகுதியில் காலில் சங்கிலி கட்டப்ப்ட்ட நிலையில் நபர் ஒருவர் சுற்றித் திரிவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அந்த நபர் கரோனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பி வந்திருக்கலாம் என்று சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த அவர்கள் அந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மணி நேரத்திற்குப் பிறகு அந்நபர் மார்க்கெட் அருகில் நிற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அவரிடம் பொதுமக்கள் விசாரிக்கையில், தனது பெயர் நீரவ் என்றும், தனது குடும்பத்தினரால் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளதாகவும், அவரைப் பற்றி தனது சகோதரருக்கு தெரிவிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதனை அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த நபரின் காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், ஜலஹள்ளி காவல் நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ஒரு மன நோய் மருத்துவமனையிலிருந்து தப்பியிருக்கலாம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.