டெல்லி கரவால் நகரில் உள்ள எஸ்.பி.எஸ். காலனியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாகக் காவல் துறையினருக்கு ஜனவரி 4ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அந்த உடலைக் கைப்பற்றி விசாரணை செய்தனர்.
விசாரணையில் அம்பலம்
விசாரணையில், இறந்தவர் தீபக் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் தீபக்கின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், விசாரணைக்கு குடும்பத்தார் ஒத்துழைப்புத் தரவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், காவல் துறையினரின் சந்தேகப் பார்வை குடும்பத்தார் மீது படர்ந்தது.
தீபக்கின் தந்தை சந்தர் பால் (56), இளைய சகோதரர் நிதின் ஆகியோரை காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தீபக்கை கொன்றது நிதின் எனவும், இதற்கு தந்தை உதவியதும் தெரியவந்தது.
நடந்தது என்ன?
சம்பவ தினத்தன்று நிதினிடம் தீபக் கஞ்சா கேட்டுள்ளார். ஆனால், நிதின் தர மறுத்துள்ளார். இது மோதலாக வெடிக்க, தீபக் துப்பாக்கியை எடுத்து 'கஞ்சா கொடுத்துவிடு' என நிதினை மிரட்டியுள்ளார். ஆனால், லாவகமாகச் செயல்பட்ட நிதின், தீபக்கின் துப்பாக்கியைப் பிடுங்கி அவரைச் சுட்டுள்ளார்.
பின்னர், தீபக்கின் உடலை அப்புறப்படுத்த தந்தை நிதினுக்கு உதவியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இருவர் மீதும் வழக்குப்பதிந்த காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: ஜேஎன்யுவில் இயல்புநிலை திரும்பவில்லை - உதயநிதி ஸ்டாலின்!