முத்தலாக்
ராஜஸ்தான் மாநிலத்தின் பாரன் மாவட்டத்தில் உள்ள அந்தா டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மெகரூன்னிசா (24). இவரின் கணவன் ஷகில் அகமது. ஷகில் அகமதுவும் மெகரூன்னிசாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இந்தத் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், ஒருநாள் அவர்களின் வாழ்வில் புயல் வீசியது. அன்றைய தினம், ஷகில் அகமது, மெகரூன்னிசாவை கேரம் போா்டு விளையாட அழைத்தார்.
அதற்கு மெகரூன்னிசா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷகில் அகமது, மெகரூன்னிசாவை முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார்.
பிடிவாதம்
மேலும் வீட்டைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் நிர்ப்பந்தித்தார். இதனால் பேரதிர்ச்சி அடைந்த மெகரூன்னிசா நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் ஷகில் அகமதுவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
எனினும் அது பலனலிக்கவில்லை. பெரியோர்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும், ஷகில் அகமது கேட்கவில்லை. மெகரூன்னிசாவை விவாகரத்து செய்தது செய்ததுதான் என்று தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார்.
வழக்குப்பதிவு- விசாரணை
இதையடுத்து செய்வதறியாமல் திகைத்த மெகரூன்னிசா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் ஷகில் அகமது மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து காவல் துறை உயர் அலுவலர் ரூப் சிங் கூறும்போது, 'ஷகில் அகமது மீது, முத்தலாக் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது' என்றார். கடந்த மாதத்தில் கோட்டா நகர் காவல் நிலையங்களில் இதுபோன்று இரு வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.