தஞ்சாவூர்: திருவையாறு தாலுக்கா இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அபிலேஸ் பேகம் (65). இவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 4 ந்தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு, தனக்கு முதியோர் உதவித்தொகை வழங்குமாறு மனு அளித்துள்ளார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், அந்த முதியோரின் வயிறு வீங்கி இருப்பதைக் கண்டு, உடலுக்கு என்ன பிரச்சனை? என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்மணி நீண்ட நாட்களாக தனது வயிறு வீங்கி இருப்பதாகத் தெரிவித்தார். இதனையடுத்து உடனடியாக தஞ்சை அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்ட ஆட்சியர், சிகிச்சை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கட்டி அகற்றம்:மேலும் அந்தப் பெண்ணுடன் யாரும் இல்லாததை அறிந்த மாவட்ட ஆட்சியர், இரண்டு சமூக நலப் பணியாளர்களை அவருக்குத் துணையாக அனுப்பி வைத்தார். இதனையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன், அறிவுரையின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு கடந்த 9ஆம் தேதி புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர்கள் மாரிமுத்து பாரதிராஜா முனியசாமி மயக்கவியல் மருத்துவர் உதயணன் தலைமையிலான குழு கடினமான அறுவை சிகிச்சை செய்து அந்த பெண்ணின் வயிற்றிலிருந்து 30 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றினர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் தனக்குத்தானே கட்டுப்போட்டுக் கொண்ட நோயாளி! காரணம் என்ன?
மருத்துவர்களுக்கு பாராட்டு: இந்த தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு நேரில் வந்து அந்தப் பெண்ணின் உடல் நலம் பற்றி அறிந்து மருத்துவ குழுவினரை பாராட்டினார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த பெண் குணமடைந்து உள்ளார்.
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் இது போன்ற அறுவை சிகிச்சை மூலம் 30 கிலோ கட்டியை அகற்றியது இதுவே முதல் முறை. அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த பெண்ணிற்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த முதியோரை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்.எல்.ஏ. சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கூறுகையில், "கடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் இந்தப் பெண்மணி தனக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்டார். அப்போது அந்தப் பெண்மணியின் வயிறு சராசரி வயிற்றை விட அதிகமாக வீங்கி இருந்தது.
இதுகுறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி முதல்வரைத் தொடர்பு கொண்டு, சிகிச்சை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். இதன் பின்னர் அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த 30 கிலோ கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
பெண்மணி ஏழ்மையான சூழ்நிலையாக இருந்தாலும் பிஎச்டி படித்துள்ளார். கட்டி பெரிதாகப் பெரிதாக மன அழுத்தத்தின் காரணமாக யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். தற்போது அந்தக் கட்டி அகற்றப்பட்டு, நலமுடன் உள்ளார்" என தெரிவித்தார்.