சென்னை : சென்னை, ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பரத்தை இவரது குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். இவருக்கு மனநல மருத்துவர் ஹரிஹரன் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார். சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது பரத் மருத்துவரின் முகத்தில் குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார்.
இதனால் மருத்துவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வன்னாரப்பேட்டை காவல் நிலையத்தில் மனநல மருத்துவர் ஹிரிஹரன் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : "மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்" அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
இந்நிலையில், ஒரே நாளில் இரு மருத்துவர்கள் தாக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து ஸ்டான்லி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பாக மருத்துவ மாணவி ஆர்த்தி கூறுகையில், "மருத்துவர்களாகிய எங்களை தயவு செய்து கடவுளாகப் பார்க்க வேண்டாம். ஒரு மனிதாபிமான அடிப்படையில் எங்களை பாருங்கள். தொடர்ந்து மருத்துவர்கள் மீது தாக்குதல் என்பது ஒரு அச்சமாக உள்ளது.
நாங்கள் மக்கள் பணி செய்வதற்காக வந்துள்ளோம். எந்த நேரத்தில் யார் எங்களை கத்தியால் குத்துவார்கள் என்று தெரியாமல் பயத்துடன் இருக்கின்றோம். தற்போது நடக்கக்கூடிய சூழ்நிலையைப் பார்த்தால் மருத்துவ படிப்பு முடித்துவிட்டு நாங்கள் எல்லாம் வெளிநாட்டுக்குச் சென்று அங்கு மருத்துவ சேவை தொடங்கலாம் என்று எங்களுக்கு எண்ணம் தோன்றுகிறது," என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்