டெல்லி அசோக் விஹார் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் முதித் சாவ்லா என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பல லட்சம் ஏமாற்றியதாக புகாரளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ''2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேட்ரிமோனி மூலம் முதித் சாவ்லா என்பவர் என்னை திருமணம் செய்வதற்காக அணுகினார். அப்போது அவர் வாடகை கார் தொழிலில் ஈடுபட்டதாகவும், டெல்லியின் பாலம் பகுதியில் போர்வை தொழிற்சாலை நடத்தி வருவதாகவும் கூறினார்.
இதையடுத்து இருவரும் பழகத் தொடங்கினோம். அந்த நேரத்தில் சின்னச்சின்ன தொகைகள் கேட்டு அணுகினார். எனது நம்பிக்கையைப் பெறுவதற்காக மீண்டும் அந்தத் தொகைகளை சொன்ன நேரத்தில் திருப்பிக்கொடுத்தார்.
தொடர்ந்து தனது தொழிலில் நஷ்டமடைந்துள்ளது என்று கூறி முதித் சாவ்லா, என்னை வங்கியில் கடன் வாங்கி வற்புறுத்தினார். இதனால் நானும் வங்கியில் கடன் பெற்று முதித் சாவ்லாவிடம் ரூ.17 லட்சம் வரை கொடுத்துள்ளேன். இப்போது திருமணம் பற்றிய பேச்சை எடுக்கும்போது, அவர் விலகத் தொடங்கினார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரைக் காவல் துறையினர் கூர்கயான் பகுதியில் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது பற்றி டெல்லி இணை ஆணையர் விஜயந்தா ஆர்யா பேசுகையில், ''பெண்ணின் புகாரில் கிடைத்த தகவல்களை வைத்து காவல் நுண்ணறிவு பிரிவினர் மூலமாகவும், மேட்ரிமோனியல் நிர்வாகம் மூலமாகவும் போதுமான தகவல்களைத் திரட்டினோம்.
இதையடுத்து தொழிற்நுட்பங்கள் மூலம் அவரைக் கண்காணித்ததில், அவர் டெல்லி கூர்கயான் பகுதியில் தலைமறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்துள்ளோம். அவரைக் காவல் துறையினர் கைது செய்யாமல் இருப்பதற்காக, அவர் தனது பெயர், இடம் ஆகியவற்றை மாற்றி வந்துள்ளார். அவரின் நிஜப்பெயர் அன்ஜித் சாவ்லா.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதேபோன்ற பல சம்பவங்களில் அவர் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் இதேபோல் நான்கு வழக்குகளில் ஈடுபட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்வதாகக் கூறி பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுப்பதாக ரூ. 15 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார். அதேபோல் முக்கிய அரசியல் தலைவரின் பாதுகாவலர் என்று கூறி நகைக்கடைகளில் மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து லேப் டாப், இரண்டு செல்ஃபோன்கள், ஒரு கார் உள்ளிட்டவர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
மேட்ரிமோனி தளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துப்பாக்கியைக் கொண்டு மிரட்டி மணல் அள்ளிய கும்பலைப் பிடித்த காவலர்கள்