சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த சரத் பவார் பாஜக தோல்வியுற்றால் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
பிரதமர் நரேந்திர மோடி முன்பு குஜராத் மாநில முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியுற்றால், அடுத்த பிரதமராகும் தகுதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி ஆகியோருக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் பல்வேறு இடங்களிலும் பாஜக அரசு தோல்வியடைந்து இருப்பதால், இந்த தேர்தலில் 100 இடங்கள் குறைவாக பெற்று பெரும்பான்மையை இழக்கும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்று, திமுக உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறிக்கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில், மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.