சென்னை: மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமாக அம்பேத்கர் திடலில், நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (நவ.27) புதன்கிழமை நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துக்கொண்டு, ஈழ போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், ஈகச்சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மேடையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “தமிழ்நாட்டில் திருமாவளவன் ஒரு சாதிக்கான தலைவர் என்று முத்திரை குத்தும் முயற்சிகளுக்கிடையே, தமிழர்களுக்கான தலைவன் என்று அடையாளம் கண்டவர தமிழீழ விடுதலைக்காகப் போராடிய தலைவர். இன்று அவர் உயிரோடு இல்லை என்பதற்காக வாய்க்கு வந்தவற்றைப் பேசி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் கருத்தியல் ரீதியாக தலைவர்களை அடையாளம் காண கூடியவர்.
தமிழ்நாட்டில் எல்லோரும் தங்களது அரசியலுக்காக ஈழ விடுதலையை பேசினார்களே தவிர உண்மையை யாரும் மக்களுக்கு சொல்லவில்லை. ஈழ விடுதலை பிரச்சனைக்கு காரணம் காங்கிரஸ், காங்கிரஸ் உடன் இணைந்த திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் என்று கூறுபவர்கள் அர்ப்பர்கள். ஏகாதிபத்ய நாடுகளின் துணை இல்லாமல் ஈழ விடுதலையை பெற முடியாது. வல்லரசு நாடுகளின் துணை இல்லாமல் புதிய நாட்டை உருவாக்க முடியாது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக விமர்சனத்தில் கவலை இல்லை: திமுகவுக்கு எதிரான விமர்சனத்தில் நமக்கு கவலை இல்லை. அவர்கள் மீதான விமர்சனத்தை திமுக பார்த்துக் கொள்ளும். திமுகவை எதிர்த்து விமர்சிப்பது நமது பொறுப்பல்ல. திமுகவிற்கு வக்காலத்து வாங்கக்கூடிய அளவிற்கு அவர்கள் பலவீனமாகவும் இல்லை. அது நமது வேலையும் இல்லை. திமுக எதிர்ப்பு திராவிட கருத்தியல் எதிராக மாறும் பொழுது நாம் குறுக்கிட வேண்டும்.
இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் போன்று பிரகாச அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை" - இராமதாசு பதில்!
திராவிடம்: திராவிடம் என்பது கலைஞர் குடும்பம் மற்றும் திமுக-வுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. திராவிடம் என்பது வேறு, தமிழ் தேசியம் என்பது வேறு என சொல்லில் பேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், திராவிடம் தான் இந்தி திணிப்பை எதிர்த்தது. இந்தி திணிப்பை எதிர்ப்பது தமிழ் தேசியத்திற்கு ஆதரவானதா? எதிர்ப்பானதா? மாநில உரிமைகளை கோரியது திராவிட இயக்கங்கள் தான்.
இந்தி திணிப்பு: இந்தியை தடுக்கப்படாமல் இருந்திருந்தால், நாம் மோடி வித்தைக்கு மயங்கி இருப்போம். பாஜக இன்று நம்மை ஆட்சி செய்திருக்கும். ஈழ விடுதலை முறியடிக்கப்பட்டதற்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. முதலமைச்சர் பதவி என்பது ஒரு அலங்கார பதவி. ஒரு மாநில முதலமைச்சரால் போரை நிறுத்தும் அளவிற்கு அதிகாரம் உண்டா? இல்லையா ? என்பதை உணராமல் பேசுவது வடிகட்டிய பொய். உலக வல்லரசு நாடுகள் இணைந்து முடிவெடுத்தால் மட்டுமே போரை நிறுத்த முடியும்.
மாவீரர் நாள் நிகழ்வு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. ஈழ விடுதலைக் களத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு மலர்தூவி ஈகச்சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தினோம்!.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) November 27, 2024
மாவீரர் நாளில் ஆற்றிய உரை...https://t.co/I5liPUD4ha
வெறுப்பு அரசியலின் வலைகளுக்குள் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும். தெலுங்கு எதிர்ப்பை சொல்லி தமிழ் தேசியம் பேசுவது, தம்மை நம்பும் தமிழர்களை ஏமாற்றும் அரசியல். மொழி உணர்வு, மொழி உரிமை, மொழி பாதுகாப்பு வேண்டும். ஆனால், மொழியை பிடித்து தொங்கக்கூடாது. ஈழத்தை வென்றெடுக்க சர்வதேச சமூகங்களின் ஆதரவை ஒன்று திரட்ட நாம் ஒருங்கிணைய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்