அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை இன்று தொடங்கிவைக்கிறார். இதனிடையே மேற்குவங்கம் ஹால்டியாவில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை அம்மாநில முதலமைச்சர் மம்தா புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 21ஆம் தேதி மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியில், 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் எழுப்பி மம்தாவை உரையாற்றவிடாமல் பாஜகவினர் தொந்தரவு செய்தனர். இதன் காரணமாக அவர் இன்று நடைபெறும் நிகழ்ச்சியை புறக்கணிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மேற்குவங்க தலைமைச் செயலக அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஹால்டியாவில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மம்தா புறக்கணிக்க உள்ளார்" என்றார். ஆனால், இந்நிகழ்ச்சியில், ஆளுநர் ஜகதீப் தங்கர் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.
எண்ணெய், எரிவாயு மற்றும் உள்கட்டமைப்பு துறைகளின் திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்க உள்ளார்.
மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பாஜக கடும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்துவருகின்றனர்.
இதையும் படிங்க:மோடி இருந்தும் அசரவில்லை - சொல்லவந்ததை சொல்லி அரங்கை அதிரவைத்த மம்தா!