கோவிட்-19 ஊரடங்கின் கள நிலவரத்தை ஆராய்ந்து மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க பரிந்துரைகளை வழங்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தக் குழு ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் குழுவானது ஊரடங்கு நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக மேற்கு வங்கம் சென்றது. அம்மாநில சுற்றுப் பயணத்திற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கம் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை என இந்தக் குழுவினர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், ஊரடங்கு கள நிலவரத்தை ஆராய வருகைதரும் மத்தியக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென மேற்கு வங்கம் ஆளுநர் ஜகதீப் தங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், அண்மையில் மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூர், பிஷ்ணுபூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பினரின் விளைவாக என்ன பலன் ஏற்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநரின் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கு வங்க முதலமைச்சர் ஏழு பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "நான் ஒரு பெருமைமிக்க இந்திய மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்பதையும் நீங்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் என்பதையும் மறந்துவிட வேண்டாம்" எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், மாநில நிர்வாக செயல்பாட்டில் ஆளுநர் தொடர்ந்து தலையீடு செய்து அரசியலமைப்பு அளித்திருக்கும் அதிகார வரம்பையும் மீறிவருகிறார்.
முதலமைச்சர் - ஆளுநர் என்ற இந்த இரண்டு பதவியிலிருந்து செயலாற்றுபவர்களில் அரசியலமைப்பு ஒழுக்க நெறிகளையும் மீறியவர் யார்? என்று சிந்தித்துப் பாருங்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : 'மத்தியக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டும்' - ஆளுநர் ஜகதீப்