ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதற்கு உலகத் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மலாலா தன் ட்விட்டர் பக்கத்தில், "என் பெற்றோர் குழந்தைகளாக இருந்தபோதிலிருந்தே காஷ்மீர் பிரச்னைக்குரிய பகுதியாகவே இருந்துவருகிறது. கடந்த எழுபது ஆண்டுகளாக காஷ்மீரைச் சேர்ந்த குழந்தைகள் வன்முறைகளுக்கு இடையே வளர்ந்துவருகின்றனர். 180 கோடி மக்கள் வாழும் தெற்காசியா என் பிறப்பிடம் என்பதால், காஷ்மீர் பற்றி அக்கறைக் கொள்கிறேன்.
பல மொழிகள், பல கலாசாரங்கள், பல மதங்கள், பல உணவு பழக்கவழக்கங்களை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். காஷ்மீரில் நடந்த வன்முறைகளில் அதிகம் பாதிப்படைந்தது குழந்தைகளும் பெண்களும்தான்.
நமக்குள்ளே எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மனித உரிமையை காக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்து, காஷ்மீர் பிரச்னையை அமைதி வழியில் தீர்க்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.