காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற்காக பாஜக-ஆர்எஸ்எஸ் போன்றவையே ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு பெருமளவில் ஆதரவளித்தது என ஆம் ஆத்மி கட்சியின் தொடங்க உறுப்பினரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் கூறியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, " ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி போன்றவை மக்களை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான மனநிலை ஏற்படுத்தவும், இந்திய ஜனநாயகத்தை தகர்க்கவும் ஆர்எஸ்எஸ் / பாஜகவால் முடுக்கிவிடப்பட்டது என்ற உண்மையை அதன் மூத்த தலைவராக இருந்த பூஷணே கூறிவிட்டார்" என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங்,"டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி உருவாவதற்கு முன்னோடியாக இருந்த ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் மீது வேண்டுமென்றே காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவதூறு பேசுகிறார்.
பொய்யான சாக்குகளைச் சொல்வதன் மூலம் அவர்கள் எவ்வளவு காலம் தங்கள் தோல்விகளை மறைப்பார்கள்? தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் இப்போது அழுவது வீண். உண்மையில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டின் மீதும் நாட்டு மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.
ஆம் ஆத்மி கட்சி மட்டுமே தேசத்தைப் பற்றி பேசுகிறது, மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கிறது. பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், நீராதாரம், நாட்டின் எதிர்காலம் குறித்தெல்லாம் பேசுகிறது .
நாடு முழுவதும் மாற்றத்தை விரும்பும் மக்களின் தேர்வாக ஆம் ஆத்மி கட்சி விளங்குகிறது" என்று கூறியுள்ளார்.