இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் வன்முறை அதிகரித்துள்ளதை தடுக்க, அதனை பிணையில் வெளிவர முடியாத குற்றமாக அறிவிக்கக் கோரி பாலிவுட் இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், மணி ரத்னம் உள்ளிட்ட பலர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், "இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள், மற்ற சிறுபான்மையினர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2016ஆம் ஆண்டில் மட்டும் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக 840 தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறாமல் தப்பிப்பது அதிகரித்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 29 வரை 254 மதம் சார்ந்த வன்முறைகள் நடந்துள்ளன. இதில் 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 579 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வலைதளம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 14 விழுக்காடு மட்டுமே உள்ள இஸ்லாமியர்கள் 62 விழுக்காடு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அதேபோல் 2 விழுக்காடு மட்டுமே உள்ள கிறிஸ்தவர்கள்தான் 14 விழுக்காடு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் எனவும், இதுபோல் 90 விழுக்காடு தாக்குதல்கள் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு பாஜக அரசு அமைத்ததற்கு பிறகு நடைபெற்றுள்ளதாக அரசு சாரா நிறுவனம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைகளுக்கு மோடி கண்டனம் தெரிவிக்கிறாரே தவிர, எந்த ஒரு கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்ததில்லை. இந்தக் குற்றங்களை பிணையில் வெளிவர முடியாத குற்றமாக அறிவிக்கக் கோரி வலியுறுத்துகிறோம். கொலைகளை பிணையில் வெளிவர முடியாத குற்றமாக அறிவிக்கையில், இதனை ஏன் அறிவிக்கக் கூடாது?
'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷம் போர் முழக்கமாக பயன்படுத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக வன்முறை தூண்டிவிடப்படுகிறது. இந்தியாவில் பெரும்பான்மை சமூகத்திற்கு புனிதமாக இருக்கக்கூடிய பெயரை ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க பிரதமரான நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளும் கட்சியை எதிர்ப்பது தேசத்தை எதிர்ப்பதாக ஆகாது. நாட்டுக்கு நிகரானது ஆளும் கட்சி அல்ல. நாட்டில் உள்ள பல கட்சிகளை போன்று அதுவும் ஒரு கட்சிதான்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.