காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா அரசு சார்பாக ஒரு சிறு புத்தகம் வெளியிடப்பட்டது. 'ஆமா பாபுஜி: ஏகா ஜாலாகா' என பெயரிடப்பட்ட புத்தகத்தில் காந்தியின் போதனைகள், பணிகள், ஒடிசா மாநிலத்திற்கு இடையேயான பிணைப்பு ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
காந்தியின் இறப்பு குறித்த விவரிக்கும்போது, விபத்தின் காரணமாக அவர் உயிரிழந்தார் என சர்ச்சையை கிளப்பும் வகையில் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் மூத்தத் தலைவரும் மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான நரசிங்க மிஸ்ரா இதனை மன்னிக்க முடியாத குற்றம் எனவும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
காந்தியின் இறப்பு குறித்த காரணத்தை குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும். காந்தி மீது வெறுப்பு கொண்டவர்களை சமாளிக்கும் விதமாக புத்தகத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒடிசா மாநில செயலாளர் ஆஷிஸ் கனுங்கோ, "வரலாற்றை மறைத்து திரித்து எழுதும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. காந்தியை கொன்றது கோட்சே, அதற்காக அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இது குழந்தைகளுக்கு தெரிய வேண்டும். அந்தப் புத்தகத்தை அரசு திரும்பப்பெற வேண்டும்" என்றார். இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: மிக்29 விமானம் விழுந்து நொறுங்கி விபத்து