சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில், முதலில் பரவிய கொரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது. சீனாவைத் தவிர தென் கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, இத்தாலி, இந்தியா, ஈரான் உள்ளிட்ட 100 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை 73 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனாவுக்கு போலி மருந்து விற்ற மூன்று பெண்களை காவல் துறையினர் மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பெயர் ராதா ராம்நாத் சாம்சே, சீமா கிருஷ்ணா அந்தாலே, சங்கிதா ராஜேந்திர அவாத் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மருத்துவர்கள், சுகாதார மைய அலுவலர்கள் போல் நடித்து அவர்கள் மருந்து விற்றதும் விசாரணையில் தெரியவந்தது. பிபல்கவுன் என்ற கிராமத்திற்கு சென்று போலி மருந்துகளை விற்க அவர்கள் முயற்சித்துள்ளனர். கிராமப்புற சுகாதார மைய அலுவலரிடம் இதுகுறித்து கிராம மக்கள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை