கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதில் பலரும் நடைபயணமாகவே சொந்த ஊருக்கு கிளம்பினர். இதனால் உயிரிழப்புகளும், விபத்துக்களும் ஏற்பட்டன.
இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்காக மத்திய அரசு சார்பாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில் வீசிய ஆம்பன் புயல், அம்மாநிலத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தின. இதனால் மேற்கு வங்க மாநில அரசுக்கு கரோனா தொற்று பரவலை சமாளிப்பதோடு, புயல் நிவாரண பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் ஷ்ராமிக் ரயில்களை மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்படுவதை சில காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என ரயில்வே துறையினருக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே மே 26ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு 41 ரயில்கள் ரயில்வே துறை சார்பாக அனுப்பட்டுள்ளன. அதில் 10 ரயில்கள் மீண்டும் கிளம்பியுள்ளன. 35 ரயில்கள் மேற்கு வங்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதைப்பற்றி ரயில்வே துறையினரிடம் பேசுகையில், ''சிறப்பு ரயில்கள் விவகாரம் இருமாநிலங்களுக்கு இடையேயானது. அதற்கு ரயில்வே துறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை'' என பதிலளித்துள்ளனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மம்தா பேனர்ஜி பேசுகையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக செயல்படும் சிறப்பு ரயில்கள் சில காலத்திற்கு மேற்கு வங்கம் வருவதை நிறுத்த வேண்டும். அவ்வளவு புலம்பெயர் தொழிலாளர்கள் நாங்கள் எங்கே தனிமைப்படுத்துவோம்? மாநில நிர்வாகம் ஏற்கனவே ஆம்பன் புயல், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கப் போராடி வருகிறது. இந்த நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வருவதால், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அரசியல் செய்வதற்கு இது நேரமல்ல. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிர அரசு நிலையாக உள்ளது - தேசியவாத காங்கிரஸ்