இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அரசின் வழிகாட்டுதல்களை மதிக்காமல் மத ரீதியான கூட்டங்களை நடத்துவது தொடர்கதையாகிவருகிறது. தென் கொரியாவில் நடைபெற்ற ஒரு மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியால் சுமார் 50 பேருக்கு கரோனா பரவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதேபோல மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்திலுள்ள பிட்கின் கிராமத்தில் நேற்று மத ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெறுவதாக அப்பகுதியிலுள்ள காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பிட்கின் கிராமத்திற்கு காவலர்கள் விரைந்து சென்றனர்.
இரவு 7.30 மணிக்கு பிட்கின் கிராமத்திற்கு சென்ற காவலர்கள் மீது கற்களை எரிந்து கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். நல்வாய்ப்பாக அவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். காயமடைந்த காவலர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோட்சாதா பாட்டீல், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பொதுமக்கள் மத ரீதியான ஒன்றுகூடலைத் தவிர்த்து வீடுகளில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: ‘பயிற்சி மருத்துவர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்’- பிரியங்கா காந்தி!