மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பதவியேற்ற தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் இணைந்து ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
தங்களுக்கு ஆதரவாக உள்ள 166 எம்எல்ஏக்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, அவர்கள் ஆளுநரிடம் அளித்தனர்.இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவை ஆட்சியமைக்க அழைத்தார். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவருடன், ஆறு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சரவை குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்தன. அதன்படி, இன்று தொடங்கிய சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 288 உறுப்பினர்களில் 169 உறுப்பினர்கள்(145 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் போதுமானது) உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம், தாக்கரே பெரும்பான்மையை நிரூபித்தார். பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து வெளிநடப்பு செய்தனர்.
மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக - சிவசேனா ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை சிவசேனா கேட்டதை, பாஜக ஏற்க மறுத்ததால், அவர்களது கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.பின், தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், சிவசேனா ஆதரவு அளிக்காத காரணத்தால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்தது.
இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். சிவசேனா ஆட்சி அமைக்க கால அவகாசம் கேட்க, மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காலஅவகாசம் கேட்டதால், குடியரசுத் தலைவர் ஆட்சி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க: ஆரே பகுதியில் மரங்களை பாதுகாக்க உத்தவ் தாக்கரே அரசு முடிவு