பிகார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும் லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியின் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கூட்டணியின் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற சிபிஐ (எம்எல்) கட்சி பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். 70 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார். சிறிய கட்சிகளுக்கு நிறைய தகுதிகள் இருந்தால் கூட அது வெற்றி பெற்று இருக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
பிகார் தேர்தலில், ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியது. லோக் ஜனசக்தி பரிசு கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தலா 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.