மகாராஷ்டிரா மாநிலம் வர்தா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்துவந்தார்.
இவரை கடந்த மாதம் 3ஆம் தேதி, விகாஷ் நகரேலே என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்.
உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் அவர் உயர் சிகிச்சைக்காக நாக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் இன்று பிரிந்தது.
முன்னதாக கல்லூரி பேராசிரியை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவனுக்கு உச்சப்பட்ச (மரணம்) தண்டனை அளிக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.
இதனால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விகாஷூக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த இரு மாதங்களாக கல்லூரி பேராசிரியையின் பின்னால் சுற்றியுள்ளார்.
அதனை அவர் கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்திலிருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தற்போது அவரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : கணவர் முத்தலாக் கூறியதால் மனைவி தீக்குளிப்பு