பல்வேறு அரசியல் குளறுபடிகளுக்குப் பின் மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான நிலையான அரசு உருவாகியுள்ளது. ’மகா விகாஸ் அகாதி’ கூட்டணியின் தலைவரான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தவிர மூன்று கட்சிகளிலிருந்தும் தலா இரு தலைவர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், மகா விகாஸ் அகாதி கூட்டணியின், குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த கொள்கையை சிவசேனா கொண்டிருந்த போதிலும், இரு மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் திட்ட அறிக்கையின் முதல் வரியிலேயே ’மதச்சார்பின்மையை கடைபிடிப்போம்' என்ற வாசகத்தை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- மகாராஷ்டிராவின் விவசாயிகளின் கவலையைப் போக்கும் வகையில், விவசாயக் கடன் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும்.
- வெள்ளம், பயிர் இழப்பு, வறட்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு திட்டம், உடனடி கடனுதவி ஆகியவை வழங்கப்படும்.
- வறட்சி காலங்களில் விவசாயத்துக்கு நீர் கிடைக்கச் செய்யும் சிறப்புத் திட்டம் ஏற்படுத்தப்படும்.
- அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்த வழிவகை செய்யப்படும்.
- ஏழைகளின் பசியைப் போக்க 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
- அடித்தட்டு மக்களுக்கும் எளிதாக மருத்துவ வசதி கிடைப்பதற்காக, மாநிலம் முழுவதும் ஒரு ரூபாய் மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
- அனைத்து வேலைகளிலும் 80 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளூர் இளைஞர்களுக்கு அளிக்கப்படும்.
- தங்குவதற்கு வீடில்லாமல் சிரமப்படும் குடிசை வாழ் மக்களுக்கு 500 சதுர அடி பரப்பளவில் வீடு இலவசமாக கட்டித் தரப்படும். இதில் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, கல்வியறிவில் பின் தங்கிய மக்களுக்கு இலவச வீடு கட்டித் தரப்படும்.
தற்போது, மகாராஷ்டிராவில் விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதால், அவர்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பல முக்கிய அம்சங்கள் இத்திட்டத்தில் நிறைந்துக் காணப்படுகிறது. வளமிக்க மகாராஷ்டிராவை உருவாக்குவதே தங்களது லட்சியம் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: 'பாஜக போலியாக அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்' - விளாசிய சோனியா காந்தி!