மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியாகவுள்ளது. அம்மாநிலத்தின் ஆளும் பாஜகவுடன் சிவசேனா கட்சி கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கைகோர்த்து இந்த சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
பாஜக-சிவசேனா கூட்டணி சுமார் 180 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 81 இடங்களில் வெற்றி வாய்ப்புகள் உள்ளது எனவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேற்படி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஆதித்யா தாக்கரே(29) மும்பையில் உள்ள ஓர்லி தொகுதியில் களம்கண்டார். இவர் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறார். தேர்தலில் போட்டியிடும் தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓர்லி தொகுதியில் ஆதித்யாவிற்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் சார்பில் பட்டியலினத்தைச் சேர்ந்த தலைவர் சுரேஷ் மானே போட்டியிடுகிறார். அத்தொகுதியில் சிவசேனா கூடுதல் பலத்தோடு இருப்பதால் ஆதித்யாவிற்கு வெற்றி வாய்ப்புகள் சற்று அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது.
மீண்டும் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் ஆதித்யாவுக்கு துணை முதலைமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவரது வெற்றி என்பது சிவசேனாவின் எதிர்கால அரசியல் வளர்ச்சியில் பெரும் திருப்புமுனையாக அமையும். மேலும், அவர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதும் அவருக்கு வெற்றியை ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை மராட்டியர்களைத் தாண்டி பிற சமூகத்தினரின் வாக்குகளை பாஜக பெற வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் முனைப்புடன் செயல்பட்டது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், ஏறக்குறைய பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
மேலும் படிக்க : #Live மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்!