மும்பை: உள்ளரங்க கட்டட வடிவமைப்பாளர்(interior design engineer) தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து தனது கவலையை மகராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குடன் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அர்னாப்பை அவரது குடும்ப உறுப்பினர்கள் சந்தித்து பேச அனுமதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அர்னாப் கைது செய்யப்பட்ட விதம் குறித்த தனது கவலையை முன்னதாகவே தேஷ்முக்கிடம் ஆளுநர் தெரிவித்திருந்தார் என அந்த அறிக்கை கூறுகிறது.
உள்ளரங்க வடிவமைப்பாளர் அன்வே நாயக் தற்கொலை வழக்கில், அலிபாக் காவல்துறையினர் அர்னாப்புடன் ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சர்தா ஆகியோரையும் கைது செய்தனர். ரிபப்ளிக் தெலைக்காட்சி அலுவலகத்திற்கான உள்ளரங்க வடிவமைப்பை செய்த அன்வே நாயக்கிற்கு பேசிய தொகை முழுவதையும் அர்னாப் கொடுக்காததால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
அர்னாப்பை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை நவம்பர் 18ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. முன்னதாக, உள்ளூர் பள்ளிக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அர்னாப், தொலைபேசி பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நேற்று ராய்க்காட் மாவட்டத்தில் உள்ள தலோஜா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
இதையும் படிங்க: அர்னாப் கோஸ்வாமிக்கு அமித் ஷா ஆதரவு