கரோனா ஊரடங்கை கண்காணிப்பதற்காக ஆறு அமைச்சரவையை ஒன்றிணைத்து மத்தியக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவிற்கு தலைமை வகிக்கும் மனோஜ் ஜோஷியிடம் காணொலி கலந்தாய்வு மூலம் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே நேற்று மாலை பேசினார்.
அப்போது, மகாராஷ்டிராவில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பவதற்கான நடைமுறைகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், "ஆறு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மகாராஷ்டிரா அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. ஆனால், அந்தத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்லவே விரும்புகின்றனர். ஆங்காங்கே இதற்காகப் போராட்டமும் நடத்துகின்றனர்.
ஏப்ரல் 30ஆம் தேதியிலிருந்து மே 15ஆம் தேதிவரை கரோனா அதிகம் பரவும் என மத்திய அரசு உணர்ந்ததால் அதற்குள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப முடியுமா என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். மேலும் அதற்கான வழிமுறைகளையும் வெளியிட வேண்டும். மத்திய அரசு இதுகுறித்து சரியான முடிவை எடுக்க வேண்டும்.
துபாயில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் ஆராய வேண்டும் என வலியுறுத்திய அவர், அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். இந்த இரு நாடுகளிலிருந்துதான் கரோனா வைரஸ் மகாராஷ்டிராவில் பரவியது" எனத் தெரிவித்தார்.
வென்ட்டிலேட்டர்கள், பாதுகாப்புக் கருவிகள் போன்றவற்றை மத்திய, மாநில அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும், தேவைப்பட்டால் ராணுவத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மருத்துவமனைகளைக் கட்ட வேண்டும், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு தானியம், உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்குவதற்கான விதியை மத்திய அரசு தளர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி மத்திய அரசு முடிவு செய்யும்: உச்ச நீதிமன்றம்!