ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாட்டில் கலை, அரசியல், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு உயரிய விருதுகளாக பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக 56 பேருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 11 ஆம் தேதி விருதுகளை வழங்கினார்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக விருதுகள் வழங்கும் விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளைக்கு பத்ம ஸ்ரீ விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.
அதேபோல், கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்ம பூஷன் விருதையும், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கி ராம்நாத் கோவிந்த் கெளரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.