'மோசர்பேயர்' என்னும் சிடி, டிவிடிகள் தயாரிக்கும் நிறுவனத்தை ரதுல் பூரி நடத்திவருகிறார். இந்த நிறுவனத்தை தொடங்குவதற்காக 2009ஆம் ஆண்டு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (central Bank of India ) வங்கியிலிருந்து ரூ.354 கோடி கடன் வாங்கியுள்ளார்.
இந்தக் கடனை ரதுல் பூரி திரும்பச் செலுத்தாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அவரை வங்கி மோசடியாளர் என்று அவ்வங்கி குற்றம்சாட்டியது. இதையடுத்து வங்கி மோசடியில் ஈடுபட்டதாக மோசர்பேயர் நிறுவனத்தின் மீதும் அதன் தலைமை நிர்வாக இயக்குநர்கள் ரதுல் பூரி, தீபக் பூரி, முழுநேர இயக்குநர் நிதா பூரி, இயக்குநர் சஞ்சய் ஜெயின் உள்ளிட்டோர் மீதும் அமலாக்கத் துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பாக ரதுல் பூரியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் இன்று ரதுல் பூரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது ஏற்கனவே அக்ஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்ததாக கூறிய வழக்கினை அமலாக்கத் துறை விசாரித்துவருவது குறிப்பிடத்தக்கது.