மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்துவருகிறது. இதன் உச்சக்கட்டமாக, போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்களின் ராஜிநாமா கடிதங்களை முதலமைச்சர் கமல்நாத்திடம் வழங்கினர்.
அவர்களின் ராஜிநாமா ஏற்கப்பட்டுள்ளது. 17 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெங்களூருவில் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாகவே, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்து மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சிப்பதாகக் கூறப்பட்டுவந்தது.
இதனிடையே, புதிய அமைச்சர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள் எனவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. சுயேச்சை உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 114 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேச்சை ஆகியவையின் ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்!