கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அசுர வேகத்தில் சென்றுகொண்டிருந்த மக்களின் நிதானம் இல்லாத வாழ்க்கையை, கரோனா வைரஸ் முற்றிலுமாக கட்டிப்போட்டுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை வீட்டில் ஒன்றுகூடி நேரங்களை செலவிட்டுவருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், மனிதர்களிடம் புதைந்து போயுள்ள குழந்தைத்தனம் வெளியே வருவதைப் பார்க்கமுடிகிறது. அப்படியோர் நிகழ்வுதான் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபாரூகாபாத் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விவசாய தொழில் செய்துவந்த கணவர், ஊரடங்கால் வீட்டிலேயே தனது மனைவியுடன் நேரத்தைச் செலவிட்டுவருகிறார். இவர்கள் இருவரும் நேற்று மாலை, லூடோ கேம் விளையாடியுள்ளனர்.
கேமின்போது, கணவர் தன்னை ஏமாற்றி விளையாடுவதை மனைவி கண்டுபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் கணவர், தான் ஏமாற்றியதை ஒத்துக்கொள்ளாததால், காவல் துறையைத் தொடர்பு கொண்டு மனைவி புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, இருவரையும் மெராபூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, இருவரிடமும் காவலர்கள் பேசி சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கான்பூர் டூ ஜபல்பூர்... பணிக்காக 450 கி.மீ நடந்து வந்த கான்ஸ்டபிள்!