திருவனந்தபுரம்: கேரளாவில் கரோனா அச்சுறுத்தல்களாலும், ஊராடங்கால் தொழில்கள் முடங்கியதாலும் பாதிக்கப்பட்டிருந்த லாட்டரி தொழில் தற்போது படிப்படியாக சூடுபிடிப்பதாகவும், அவற்றின் பயன்பாடு மக்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
லாட்டரி சீட்டுகளால் பல குடும்பங்கள் பாதிப்படைவதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கும், பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் மாநில அரசுகளே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து அரசின் வருவாயை அதிகரிக்கின்றன.
அந்த வகையில், தற்போதுவரை அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அனுமதிக்கப்பட்டுவருகிறது. கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் சில நாள்களாக லாட்டரி சீட்டுகளின் மேல் கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில், தற்போது அங்கு லாட்டரி சீட்டுகளின் புழக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. சில நாள்களில் அவை கரோனாவிற்கு முந்தைய காலங்களில் விற்பனையான அளவில் விற்பனையாவதற்கும் வாய்ப்புள்ளது என கேரள அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் பலர் தங்களது தொழிலை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், லாட்டரி சீட்டு விற்பனை புத்துயிர் பெறுவதாக லாட்டரி சீட்டு நிறுவனங்கள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றன.
லாட்டரி தொழிலில் கடந்த ஆண்டு வரி அல்லாத பிரிவுகளின் கீழ் மாநில அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் கிடைத்தது. இது நடப்பாண்டில் நிகழாமல் போனாலும், லாட்டரி சீட்டுகளின் விற்பனை வரும் நாள்களில் அதிகரிக்கும் என்பதால், ஊரடங்கு காலத்தில் இழந்தவற்றை இதன்மூலம் ஈடுசெய்ய முடியும் என்று மாநில அரசும் லாட்டரி துறையும் நம்பிக்கையுடன் உள்ளன.
இதையும் படிங்க: சென்னையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்ற ஆறு பேர் கைது!