கரோனா பரவலைத் தடுக்கப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. மேலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே மார்ச் மாதம் 20ஆம் தேதி கோவாவிலிருந்து 11 லாரிகளில் மதுபான பாட்டில்கள் புதுச்சேரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
ஒவ்வொரு லாரிகயிலும் சுமார் 12 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் ஊரடங்கு உத்தரவுக்கு முன்னே அனுப்பி வைக்கப்பட்டது. லாரிகள், கர்நாடக மாநில எல்லையைக் கடந்து ஓசூர் வந்தபோது, ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால், புதுச்சேரிக்கு வர முடியாமல் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி ஒருவழியாக, கடந்த 18ஆம் தேதி அனைத்து லாரிகளும் புதுச்சேரி எல்லை அருகே கோரிமேடு வந்தடைந்தது.
மதுபானம் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி தேதி முடிந்துபோனதால் மீண்டும் அனுமதிச் சீட்டு வாங்க லாரி ஓட்டுநர்கள் கோரிமேடு எல்லையில் காத்துக்கிடந்தனர். லாரி ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. மேலும், பல லட்சம் மதிப்பிலான மதுபானங்களை பாதுகாக்க மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இந்நிலையில், நேற்று தமிழ்நாடு காவல் துறையினர், லாரிகளை புதுச்சேரி எல்லைக்குள் கொண்டு செல்ல நிர்பந்தித்துள்ளனர். புதுச்சேரி காவல் துறையினரோ அனுமதிச் சீட்டு இல்லாமல் உள்ளே அனுமதிக்க முடியாது என்று மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு புதுச்சேரி எல்லைப் பகுதிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை புதுச்சேரி காவல் துறையினர் தடுத்து நிறுத்தி லாரிகளை புதுச்சேரிக்குள் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய லாரி ஓட்டுநர் கணேசன், " கடந்த ஒரு மாத காலமாக வீட்டிற்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். எல்லைப் பகுதியில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகிறோம். புதுச்சேரி அரசு நல்ல முடிவு எடுக்கவில்லையென்றால் தீ குளிக்கவும் தயங்கமாட்டோம்" என வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் நடந்தது என்ன? முத்தரசன் கேள்வி