பெங்களூருவின் ஈஜிபுரா பகுதியில் அமைந்துள்ள கோதண்டராம கோயிலில் 108 அடி உயர பீடத்துடன் ஆதிசேஷன், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட பிரமாண்ட விஷ்ணு சிலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் 108 அடி அளவிலான பெரிய கல் கிடைக்காததையடுத்து இரண்டு சிலைகளும் தனித்தனியாக செய்யும் பணி கடந்த 2014ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியகொரக்கோட்டை கிராமத்தில் தொடங்கப்பட்டது.
பின்னர் மூன்று வருடமாக நடைபெற்ற பணி நிறைவடைந்த நிலையில் 380 டன் எடைகொண்ட இந்த பிரமாண்ட சிலையானது 240 டயர்கள் பொருந்திய லாரியில் வைக்கப்பட்டது. பின்னர் கடந்த டிசம்பர் மாதம் இந்த சிலை தனது பயணத்தை தொடங்கியது.
இந்த பயணத்தின்போது வழிநெடுகிலும் பல்வேறு தடைகள் ஏற்பட்டது. தமிழ்நாட்டின் சில இடங்களில் குறுகலான சாலைகள் இருந்ததால் அருகிலிருந்த வீடு, கடைகள் இடிக்கப்பட்டன. இதற்கு பல்வேறு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோயில் நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தது. எனினும் வழியெங்கும் மக்கள் சிலையை வழிபாடு செய்துவந்தனர்.
தொடர்ந்து பல்வேறு தடைகளை சந்தித்த இந்த சிலை ஆறு மாத பயணத்திற்கு பின் நேற்று பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் அமைந்துள்ள கோதண்டராம கோயிலை அடைந்தது. இந்த சிலையை நிறுவும் பணி மூன்று வருடத்தில் முடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.