நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3ஆம் தேதி முதல் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, சில இயக்கங்களை நாளை (ஏப்ரல் 20) முதல் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மக்களவை அலுவல் பணி நாளை மீண்டும் தொடங்கவுள்ளது. இதுகுறித்து மக்களவை செயலர் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், மக்களவை ஊழியர்கள் எண்ணிக்கையில் 33 விழுக்காட்டினர் மட்டும் தற்காலிகமாகப் பணிகளை தொடங்கலாம். அவர்கள் சமூக இடைவெளி விதியைப் பின்பற்றி, முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். உணவு இடைவேளையின் போது ஒன்று கூடுவது, பொது இடங்களில் எச்சில் துப்புவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.
5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள பெண் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து பணியாளர்களும் 'ஆரோக்கிய சேது' செயலியைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் இதுவரை 1,900 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 43 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியத்தை குறைக்கும் திட்டம் இல்லை - நிதியமைச்சகம் விளக்கம்