கோவிட்-19 பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் 22 விழுக்காட்டிற்கும் மேல் இந்தக் காலாண்டில் குறைந்துள்ளது.
கரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க, அரசு, மக்கள் நலத் திட்டங்களில் அதிக அளவு செலவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு கூடுதலாக சுமார் 2.35 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க மக்களவையில் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பல்வேறு துறைகளும் ஒப்புதல் அளித்திருந்த செலவுகளில் சுமார் 69,000 கோடி ரூபாயைக் குறைப்பதன் மூலம், இந்தத் தொகையை அரசு ஏற்பாடு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கரோனா காரணமாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்தக் கூடுதல் தொகையில் பெருமளவு மக்கள் நலத்திட்டங்களில் செலவு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார்.
மேலும, "இந்தக் கூடுதல் தொகையில் பெருமளவு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவது, மாநிலப் பேரிடர் நிவாரண நிதி, சுகாதாரம், உணவு மானியம், கடன் உத்தரவாதத் திட்டம் மற்றும் பிரதமர் கரிப் கல்யாண் திட்டம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்.
இது தவிர, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயை நெருங்க உள்ளது" என்றார்.
முன்னதாக கரோனா காரணமாக வேலையிழந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிய குடிபெயர் தொழிலாளர்களுக்கு, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலையில்லா திண்டாட்டம்: தங்களைத் தாங்களே விற்கும் கூலி தொழிலாளர்கள்!