'சிம்மாசனத்தைக் காலி செய்யுங்கள், மக்கள் படையெடுத்து வருகின்றனர்'. டெல்லி ராம் லீலா மைதானத்திலிருந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நோக்கி எழுந்த இம்முழக்கம் சுதந்திர இந்திய அரசியலில் வரலாற்றுத் தருணமாகும். 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி ராம் லீலா மைதானத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் முன் இந்தி மொழிக் கவிஞரான ராம்தாரி சிங் தினகரின் மேற்கண்ட வரிகளை, ஜெயபிரகாஷ் நாராயண் முழங்கியதன் விளைவு, இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
ஜே.பியின் முதல் அத்தியாயம்:
இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி, பின்னாளில் அந்த சுதந்திரத்தின் விழுமியங்களைப் பாதுகாக்க இரண்டாவது போராட்டத்தை நாடு முழுவதும் முன்னெடுத்து, இந்திய ஜனநாயகத்தின் காவலனாகத் திகழ்ந்தவர்தான் 'லோக் நாயக்' எனப் போற்றப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயண். 1902ஆம் ஆண்டு பிகார் மாநிலம் சிதாப்தியரா கிராமத்தில் பிறந்த ஜெயபிரகாஷ் நாராயண் தனது பள்ளிப்படிப்பை பாட்னாவில் முடித்தார். பின்னர், மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற ஜே.பி, தனது செலவுகளுக்காக அங்கே தொழிற்சாலைகளில் பகுதிநேரமாகப் பணியாற்றினார்.
சோஷலிசச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஜே.பி, தனது படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியதும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். காந்தியின் வருகைக்குப் பின்னர் மக்கள் இயக்கமாகக் காங்கிரஸ் உருவெடுத்திருந்த காலம் அது. அன்றைய காங்கிரசின் துடிப்புமிக்க இளம் சக்தியாக இருந்த நேருவின் அழைப்பை ஏற்று, காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்துகொண்ட ஜே.பி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.
காந்தியின் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் சோஷலிசக் கொள்கையில் தீவிர பிடிப்புக்கொண்டவர் ஜே.பி. இதன் காரணமாக 1934ஆம் ஆண்டு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார். புரட்சிகரச் சிந்தனைகளைக் கொண்டிருந்த அவர், 1942ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாகக் கைது செய்யப்பட்டார். கலகச் சிந்தனை ஜே.பிக்கு இயல்பிலேயே இருந்ததால், சிறையிலிருந்து ரகசியமாகத் தப்பிச் சென்று ஆங்கிலேய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார் என்பதும் சுவாரஸ்யமான நிகழ்வு.
1947இல் இந்திய விடுதலைக்குப் பின் அமைந்த அரசில் ஜே.பி. பங்கேற்க வேண்டும் என அன்றைய பிரதமர் நேருவிடமிருந்து அழைப்பு வந்தது. பலமுறை வற்புறுத்தியும், அமைச்சரைவையில் இடம்பெற மறுத்துவிட்டார் ஜே.பி. சுதந்திரத்திற்குப் பின் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, ஆச்சார்ய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1950 முதல் 60களின் இறுதிவரை அவரது செயல்பாடு அரசியல் களத்திலிருந்து கிராம நிர்மாணக் களத்தில் அமைந்திருந்தது.
காலத்தின் கட்டாயத்தில் பிறந்த இரண்டாம் அத்தியாயம்
'மரங்கள் ஓய்வை நினைத்தாலும் காற்று விடுவதில்லை' என்பதைப்போல், அரசியலிலிருந்து ஒதுங்கிய ஜே.பியை மீண்டும் கள அரசியலுக்குக் காலம் கொண்டுவந்து சேர்த்தது. 1969இல் காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில், அன்றைய இளம் தலைவர்களைத் தளபதிகளாகக் கொண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி, கட்சியில் தனது பிடியைத் தக்க வைத்துக்கொண்டார். பின்னர் வங்கி தேசியமயமாக்கல், ஏழ்மை நீக்கம் போன்ற நடவடிக்கைகளால் வெகுஜன மக்கள் மத்தியில் இந்திரா காந்தி மீதான அபிமானம் பெருகிக்கொண்டுவந்தது.
அதன் உச்சமாக 1971இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றிபெற்று, வங்கதேசம் என்ற தனி நாட்டை உருவாக்கியது இந்திரா காந்தியின் ஆளுமையின் மைல்கல்லாகப் பார்க்கப்பட்டது. எதிர் அணியின் தலைவரான வாஜ்பாய் அவரை 'துர்க்காதேவி' என்று புகழ 'இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்திரா' என்ற அளவிற்கு தன்னிகரில்லா சக்தியாக இந்திரா காந்தி உருவெடுத்திருந்தார்.
தனது அரசியல் முன்னோடியான நேருவின் மகளான இந்திரா காந்தி புகழ், அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் போது அவரது வீழ்ச்சிக்கு தானே காரணமாக உருவெடுப்போம் என ஜே.பி அன்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 1974 காலக்கட்டத்தில் இந்தியாவில் விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகள் தலைவிரித்தாடத் தொடங்கின. இதற்கு ஊழல், முக்கியக் காரணமாக அமைந்தது. குஜராத் மாநிலத்தில் விடுதி வாடகைகூட கட்டமுடியாமல் தவித்துவந்த மாணவர்கள், அரசின் ஊழலுக்கு எதிராகப் போராட்டத்தைக் கையிலெடுத்து களத்தில் இறங்கினர். அரசின் அடக்குமுறை மாணவர்கள் மீது பாய, இந்தச்செய்தி ஜே.பியின் செவிகளுக்கு எட்டியது. தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஜே.பி, மாணவர்களுக்காக மீண்டும் களத்திற்கு வந்தார். பின்னர் இந்த மாணவர்கள் போராட்டம் மற்ற மாநிலங்களிலும் பரவத் தொடங்கியது. 1974இல் பிகார் அரசுக்கு எதிராக மாணவர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டுபேர் உயிரிழந்தனர். இதன் பின்னர்தான் ஜே.பி. தனது இயக்கத்தைப் பெரும் பாய்ச்சலுடன் முன்னெடுத்தார்.
பிகார் தலைநகர் பாட்னாவில் மாபெரும் பேரணி நடத்தி முழு புரட்சி (Total Revloution) என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதனையடுத்து, பிகார் அரசு கலைக்கப்பட்டது. அதிகாரத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார் ஜே.பி.
1975ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் நீதித்துறை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது. பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக ராஜ் நாராயண் தொடர்ந்த வழக்கில், இந்திரா காந்திக்கு எதிராக, அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, இந்திரா காந்திக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. ஒருபுறம் ஜே.பி தலைமையிலான மக்கள் இயக்கம் மூலம் நெருக்கடி, மறுபுறம் சட்டரீதியாக நெருக்கடி.
இதன் உச்ச நிகழ்வாகத்தான் 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, தலைநகர் டெல்லியில் லட்சக் கணக்கான மக்களைத் திரட்டிய ஜே.பி. 'சிம்மாசனத்தைக் காலி செய்யுங்கள், மக்கள் படையெடுத்து வருகின்றனர்' என்ற வரிகளை முழங்கினார். 72 வயது புரட்சியாளனின் குரலால் ஆட்டம் கண்ட இந்திராவின் அரசு, இரவோடு இரவாக நாடு முழுவதும், அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது. ஜே.பி. உள்ளிட்ட நாட்டின் முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையிலிருந்த ஜே.பிக்கு சிறுநீரகம் மோசமடையத் தொடங்கியது. உயிருக்கே ஆபத்தாகும் அளவிற்கு நிலைமை போனது. ஏதேனும் விபரீதம் நடந்தால் தனக்கு அவப்பெயர் நேர்ந்துவிடும் என்று அஞ்சிய இந்திரா காந்தி, 1975ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி ஜே.பியை விடுதலை செய்தார்.
உடல் நிலை மோசமாக இருந்த சூழலிலும் இயக்கத்தைத் தளராமல் முன்னெடுத்தார் ஜே.பி. கடும் அழுத்தங்களின் விளைவாக, 1977ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அவசர நிலையைத் திருப்பப்பெற்று பொதுத்தேர்தலை அறிவித்தார் இந்திரா. இந்திராவுக்கு எதிராகச் சக்திகளை ஒன்றிணைத்து ஜனதா கட்சியை உருவாக்கினர் ஜே.பி. இந்தியாவில் மக்களாட்சியின் மகத்துவத்தை உணர்த்திய தேர்தல் அது. முதல் பொதுத்தேர்தலிலிருந்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இந்தியாவின் முகமாகவும், துர்க்காதேவியாகவும் பார்க்கப்பட்டு, உச்சத்திலிருந்த பிரதமர் இந்திரா காந்தி தான் போட்டியிட்ட ரே பரேலி தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
எந்த காங்கிரஸ் பேரியக்கத்தைக் கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டு விடுதலைக்காகப் போராடினாரோ, அந்த ஜே.பி.தான் சுதந்திர இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை உருவாக்கிய பிதாமகராகவும் உருவெடுத்தார்.
தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தேர்தலில் தோல்வியடைந்திருந்த இந்திரா காந்தியைத், தான் சந்திக்கப்போவதாக ஜே.பி. தனது சகாக்களிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள், இந்திரா தோற்றுவிட்டார், உங்கள் சிறுநீரகம் வேறு மோசமாக உள்ளது இந்த சூழலில் நீங்கள் சந்திப்பது அவசியம் தானா எனக் கேட்டனர். அவர்களிடம், நான் எனது அண்ணன் மகளான இந்துவை (இந்திரா காந்தி) சந்திக்கப்போகிறேன்; இதில் என்ன இருக்கிறது என்றுள்ளார் ஜே.பி. இந்த சம்பவம்தான் ஜே.பி. என்ற மகத்தான மனிதரின் அருமையை தனக்கு உணர்த்தியதாக, தற்போது மத்திய அமைச்சராக உள்ள ரவிசங்கர் பிரசாத் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மக்கள் இயக்கமும் தலைவர்களும்
மக்கள் இயக்கம்தான் தலைவர்களை உருவாக்கும் காலத்தின் கருவியாக விளங்குகிறது. நவீன இந்தியாவின் முதற்கட்டத் தலைவர்களை இந்தியச் சுதந்திரப் போராட்டம் உருவாக்கியது. நேரு, படேல், லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர், ஜே.பி உட்பட முதற்கட்டத் தலைவர்கள் உருவானது காந்தி தலைமையிலான காங்கிரஸ் இயக்கத்தின் மூலம்தான்.
அதன்பின்னர், இந்தியா கண்ட மக்கள் இயக்கமான ஜே.பி. இயக்கம்தான் இரண்டாம் கட்டத் தலைவர்களை நாட்டிற்குத் தந்தது. லாலு பிரசாத், முலாயம் சிங், ராம் விலாஸ் பஸ்வான், நிதிஷ் குமார், ஜார்ஜ் பெர்னாண்டஸ் என ஜனதா தள சோஷலிசத் தலைவர்கள் தொடங்கி, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள பல தலைவர்கள் ஜே.பி. இயக்க காலத்தில் உருவானவர்கள்தான். இன்றைய சூழலில் தனித்துவம் வாய்ந்த இளம் தலைவர்கள் தென்படவில்லை என்பதுதான் யதார்த்தம். அடுத்தக்கட்டத்தின் பிரதிநிதிகளாக இருக்கும் பெரும்பாலானவர்கள், முந்தைய கட்டத் தலைவர்களின் வாரிசுகளாக உள்ளனர் என்பதே களச்சூழல்.
அன்னா ஹசாரே இயக்கத்தில் தோன்றி அரசியல் தலைவராக உருவெடுத்து மக்கள் அபிமானத்துடன் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலை வேண்டுமென்றால் விதிவிலக்காக வைத்துக்கொள்ளலாம். கெஜ்ரிவாலைத் தாண்டி வேறு எந்த தலைவரும் ஆம் ஆத்மி கட்சியில் பரிணமிக்க முடியவில்லை.
நரேந்திர மோடியை எதிர்க்க முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறிவரக் காரணம் என்ன என்றக் கேள்விக்கு அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறிய பதில், "ஜே.பி போல பதவி, அதிகாரம் மீது ஆசையற்ற தன்னலமில்லா தலைவர் இப்போது யார் இருக்கிறார்கள்" என்பது தான். ஆம், 72 வயதிலும் அதிகாரத்தின் உச்சத்தை தன்னலமில்லாமல் எதிர்க்கும் உறுதிகொண்ட ஜே.பி. போன்ற ஆளுமை மீண்டும் கிடைப்பது அபூர்வமே. அக்டோபர் 11ஆம் தேதியான இன்று மக்கள் தலைவன் (லோக் நாயக்) பிறந்த தினம்.
இதையும் படிங்க: 'நிழலில் இருந்து நிஜ அதிகாரத்திற்கு...' - மராட்டியத்தைப் புரட்டிய தாக்கரே அரசியலின் கதை