2013ஆம் ஆண்டு மாநிலங்களின் அரசு துறைகளில் நடக்கும் ஊழலை விசாரிக்க லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தில் முதன்முறையாக லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டது. இதையடுத்து தற்போது 15 மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
சட்டத்தின் நோக்கம்:
இந்த சட்டம் கூறும் முக்கிய அம்சம் என்னவென்றால் அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் ஊழல் செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பதவியை பறிப்பது, கட்டாய ஒய்வு அளிப்பது, ஊதியத்தை நிறுத்தி வைப்பது, பணிநீக்கம் செய்தல் போன்றவற்றை கட்டாயமாக்குகிறது.
உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு :
இந்நிலையில் இன்னும் 12 மாநிலங்களில் இந்த அமைப்பு தொடங்கவில்லை. லோக் ஆயுக்தா அமைப்பு இயங்காத 12 மாநிலங்களில் தொடங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் லோக் ஆயுக்தா அமைப்பு தொடங்க கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா:
இதைத்தொடர்ந்து முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் லோக் ஆயுக்தா குறித்து நடந்த ஆய்வுக் குழு கூட்டத்தில் தலைவர், உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதையடுத்து இந்த அமைப்பின் முதல் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டார். மேலும் உறுப்பினர்களாக ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நீதித்துறையைச் சாராத ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் ராஜாராம், கோவை மாவட்ட அதிமுக வழக்கறிஞர் சங்க நிர்வாகி ஆறுமுகம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
நியமனத்திற்கு தடை கோரி வழக்கு:
இந்நிலையில், ராஜாராம், ஆறுமுகம் ஆகிய இரண்டு பேரும் விதிகளுக்கு புறம்பாக லோக் ஆயுக்தாவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கரூர் மாவட்டம், வெங்கமோடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட இரண்டு பேரின் நியமனத்திற்கு மட்டுமில்லாமல் லோக் ஆயுக்தா தொடர்பான மாநில அரசின் அனைத்து ஆணைக்கும் சேர்த்து தடை விதித்து உத்தரவிட்டது.
தமிழ்நாடு அரசு மேல்முறையீடு:
உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் உத்தரவில்,”தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவிற்கு எந்த தடையும் விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து கடந்த மே 8ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஜூலை 23ஆம் தேதி நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் என உத்தரவிட்டது.
இடைக்கால தடை நீக்கம்:
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதங்கள் பின்வருமாறு:
அரசு தரப்பு வழக்கறிஞர்: லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நியாயமில்லை.
அரசு தரப்பு வழக்கறிஞர்: லோக் ஆயுக்தா போன்ற அரசு அமைப்புகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் பணி அரசு பணி என கருத முடியாது என வாதிட்டார்.
நீதிபதி: தமிழகத்தில் லோக் ஆயுக்தாவுக்கு 2 உறுப்பினர்களை அரசு நியமித்தது சரியே. 2 உறுப்பினர்களின் நியமனமும் செல்லும். தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்குகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.