கரோனா பெருந்தொற்றுக்கிடையே, பாகிஸ்தானிலிருந்து வந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் விவசாயப் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் 383 இடங்களில் வெட்டுக்கிளி தாக்குதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராஜஸ்தான் வேளாண்மை அமைச்சகம், "ஜெய்சல்மெர், ஸ்ரீகங்காநகர் மாவட்டங்களில் ஏப்ரல் 11ஆம் தேதிமுதல் வெட்டுக்கிளி தாக்குதல் நடந்தது. இதையடுத்து, மே 30ஆம் தேதி அல்வார் மாவட்டம் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு உள்ளானது.
இதனைக் கட்டுப்படுத்த 120 கண்காணிப்பு வாகனங்கள், மூன்றாயிரத்து 200 தண்ணீர் லாரிகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பொருத்தப்பட்ட 800 டிராக்டர்கள், 45 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
383 பகுதிகளில் 11 லட்சத்து ஆறாயிரத்து 91 ஹெக்டேரில் வெட்டுக்கிளி தாக்குதல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்கொள்ள வேளாண்மைத் துறை ரூ.15 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதுதவிர, பேரிடர் மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.1.45 கோடி நிதி அளித்துள்ளது. சமீபத்தில், ஜெய்ப்பூர் சமோத் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்றன" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து!