உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் உள்ள கர்ன்பிரயக்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எம்.எல்.ஏ அமன்மணி திரிபாதி, தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். இதையடுத்து திரிபாதி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஆறு பேர் மீது காவலர்கள், இந்திய தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் 188, 269 மற்றும் 270 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அவருக்கு நீதிமன்றத்தில் பிணை கிடைத்துள்ளதாக அலுவலர் ஒருவர் கூறினார். இது தொடர்பாக எம்.எல்.ஏ. திரிபாதி கூறுகையில், “முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தந்தையின் ஆன்மா சாந்தியடைந்த பிரார்த்தனைக்கு பத்ரிநாத் செல்ல விண்ணப்பித்திருந்தேன். நான் எந்த விதியையும் மீறவில்லை” என்றுள்ளார். திரிபாதி, மே2ஆம் தேதி டேராடூனுக்கும், 3ஆம் தேதி பத்ரிநாத்துக்கும், 5ஆம் தேதி கேதர்நாத்துக்கும், 7ஆம் தேதி மீண்டும் டேராடூனுக்கும் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்கள் சில தளர்வுகளுடன் முழு அடைப்பை நீட்டித்துள்ளன. இதற்கிடையில் வைரஸ் பாதிப்புக்கு நாடு முழுக்க, 49 ஆயிரத்து 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 1,694 ஆகவும், சிகிச்சைக்கு பின்னர் மீட்பு 14 ஆயிரத்து 183 ஆகவும் உள்ளது.
இதில், உத்தரப் பிரதேசத்தில் இரண்டாயிரத்து 859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் கூட மீட்கப்படவில்லை.
இதையும் படிங்க: மருத்துவராக விரும்பி உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த சாதனைப் பெண்!