தெலங்கானா மாநிலத்தில் நேற்று (18/05/2020) வரை 1,592 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,002 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பிவிட்ட நிலையில், 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் இதுவரை 34 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அரசு உயர் அலுவலர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், ஏற்கனவே 29ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கானது, இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற பகுதிகளில் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது எனவும் கூறினார்.
அதேபோல், பச்சை மண்டலங்களில் பேருந்துகள், ஆட்டோக்கள் போன்றவை கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சலூன்களை மாநிலம் முழுவதும் திறந்துகொள்ளலாம் எனவும் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.