உலகம் முழுவதும் லட்சணக்கானோரின் உயிரைப் பறித்துள்ள கரோனா வைரஸின் கோர தாண்டவத்தால் பொதுமக்கள் இருக்கிமிடத்திலேயே முடங்க வேண்டியுள்ளது. இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டன. இதனால் அண்டை மாநிலங்களில் வேலை செய்வோர், படிப்பிற்காக வந்தவர் என பல்வேறு தரப்பினரும் சொந்த ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஆந்திராவில் சிக்கிய தனது மகனை மீட்க 1400 கிமீ வண்டியிலேயே பயணித்து தாய் வீடு சேர்த்த சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோன்ற சம்பவம் தற்போது கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் கொட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார்(29). இவருக்கு திருமணம் முடிந்து, ஒரு வயதில் குழந்தை உள்ளது. ராணுவ வீரரான அருண் குமார் பிப்ரவரி மாதம் வீடு சென்று வீட்டு மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். அதையடுத்து மயோசிடிஸ் (தசை வீக்கம்) நோயால் பாதிக்கப்பட்ட அவர், தனது தாய் சீலாம்மா மற்றும் மனைவி பார்வதியான்ந்த் ஆகியோரை சந்திக்க விரும்பியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் அருண் குமாரின் நிலையைப் பற்றி அங்கு பணிபுரியும் மலையாளி மருத்துவர் ஒருவர் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் கரோனா வைரஸால் மாநில எல்லைகள் அடைக்கப்பட்ட நிலையில், எவ்வாறு அவரை சந்திக்க முடியும் என குடும்பத்தினர் சோகத்தில் இருந்துள்ளனர்.
கேரளாவின் கோட்டயம் பகுதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மருத்துவமனை செல்வதற்கு தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா, குஜராத் ஆகிய நான்கு மாநில எல்லைகளைக் கடப்பதோடு, 2400 கிமீ தூரம் பயணிக்க வேண்டும். இதனிடையே பேருந்து வசதியோ, ரயில் சேவையோ கிடையாது. காரில் மட்டுமே பயணிக்க முடியும். காரில் செல்ல வேண்டுமென்றால் அரசின் உதவியின்றி செல்ல முடியாது. இதனிடையே குடும்பத்தின் பொருளாதார பிரச்னையையும் சமாளிக்க வேண்டும்.
இந்த செய்தி கோட்டயம் பகுதியின் மாவட்ட ஆட்சியரின் காதுகளுக்கு எடுத்துச் செல்லப்பட, தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் முரளிதரன் ஆகியோருக்கு தெரிவிக்கப்படுகிறது. பின்னர் இவர்களின் உதவியால் மாநில எல்லைகளைக் கடந்து செல்ல தாய் சீலாம்மாவுக்கும், மனைவி பார்வதியனந்திற்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது.
ஒருசில தன்னார்வ அமைப்புகளின் உதவியால் எவ்வித கட்டணமின்றி ஒரு காருடன், இரண்டு ஓட்டுநர்கள் தாய் சீலா, மனைவி பார்வதி ஆகியோருடன் அனுப்பப்படுகிறார்கள்.
ஏப்ரல் 11ஆம் தேதி கோட்டயத்தின் பனக்கச்சிர கிராமத்தில் தொடங்கிய தாயின் பயணம், எவ்வித பிரச்னையுமின்றி ஏப்ரல் 14ஆம் தேதி கேரள வருடப்பிறப்பு அன்று ஜோத்பூரில் முடிவடைகிறது. இதனைப்பற்றி நெகிழ்ச்சியுடன் பேசிய தாய் சீலாம்மா, '' நாங்கள் எந்த பகுதியிலும் எவ்வித பிரச்னையும் இன்றி சரியான நேரத்தில் மகனிடன் வந்து சேர்ந்துள்ளோம். இதற்காக எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்'' என்றார்.
மூன்று நாள்களில் 2700 கிமீ தூரம் பயணித்து ஆறு மாநில எல்லைகளைக் கடந்து மகனை சந்தித்த தாயின் பாசம் அனைத்து தரப்பினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: தாய்மையும் கடமையும் எனதிரு கண்கள்... பிரசவ விடுப்பை தூக்கியெறிந்த ஐஏஎஸ்!